மொழி பெயர்ப்புக் கருவி

Saturday, December 4, 2010

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(11)

நான் நிறைய வலைப்பூக்களைப் பார்வையிடும் போது ஒரு விஷயத்தை முக்கியமாக கவனித்திருக்கிறேன். ஆன்மீக விஷயங்களை எழுதும் நான் உட்பட, எங்களைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமலேயே குருஜி என்றழைக்கிறார்கள்.நீங்கள் குரு என அழைக்கும் நபர், குரு என அழைக்க தகுதியானவர்தானா என்று எப்படி தெரிந்து கொள்வது.


இந்தப் பதிவில் யாரை குரு என்று அழைக்கலாம், யாரை குருவாக ஏற்றுக் கொள்ளலாம் என்று அகத்திய முனிவர் அருளிச் செய்த தமது அடுக்கு நிலைப் போதம் என்ற நூலில் கூறுகிறார்.அதைப் பார்ப்போம்.
அகத்திய முனிவர் அருளிச் செய்த
அடுக்கு நிலைப் போதம்
(1)சொல் பிறந்தவிடமெங்கே முப்பா ழெங்கே!
துவார பாலரெங்கே முதற் பாழெங்கே!
நல்ல சங்கு நதியெங்கே வைகுந்த மெங்கே!
நாரணனும் ஆலிலை மேல் படுத்ததெங்கே!
அல்லல் படும் ஐம்பூத மொடுக்க மெங்கே!
ஆறைந்து யிதழ்ரெண்டு முளைத்த தெங்கே!
சொல்ல வல்லாருண்டானா லவரை நாமும்!
தொழுது குருவெனப் பணிந்து வணங்கலாமே!


(2)உந்தியெனும் நிலையெங்கும் அறுகோண மெங்கே!
ஓங்கார நிலையெங்கே உற்றவி டமுமெங்கே!  
மந்திரமுஞ் சாஸ்திரமும் பிறந்த தெங்கே!
மறை நாலும் விரித்த வயன் தானுமெங்கே!
முந்தி வரும் கணபதியும் பிறந்த தெங்கே!
முக்கோண முனை யெங்கே அடிதா னெங்கே!
இந்தவகைப் பொருளறிந்து சொல்வார் தம்மை!
இறைவனென்றே கருதி யியம் பலாமே!


(3)பற்பதத்தில் பொங்கி வரும் வழிதானெங்கே!
பரிந்து முறை கொண்டு நின்ற அறிவுமெங்கே!
உற்பனமாங் கருநின்று விளைந்த தெங்கே!
யொருபாதம் தூக்கி நின்ற வடையாள மெங்கே!
தற்பரமா யாகிநின்ற நிலைதா னெங்கே!
சர்வ வுயிராய் எடுத்த சிவனு மெங்கே!
இப்பொருளை அறிந்துரைக்கும் பெரியோர் தம்மை
இறைவ னென்றே கருதி யியம்பலாமே!


(4)அடிமுடியும் நடுவான நிலையு மெங்கே!
அறுசுவையும் கொண்டொ ழித்தவிடமு மெங்கே!
வடிவான வைந்தலை மாணிக்க மெங்கே!
வரையான வூமை யென்னும் எழுத்து மெங்கே!
இடமாக ஆடி நின்ற பாத மெங்கே!
அடைவாயிப் பொருளறிந்து சொல்வார் தம்மை
அடி தொழுது குருவென்று நம்பலாமே!


(5)சற்குருவும் சந்நிதியு மான தெங்கே!
சாகாத காலெங்கே வேகாத் தலையுமெங்கே!
முப் பொருளுமொரு பொருளாய் நின்ற தெங்கே!
முனையெங்கே தலையெங்கே முகமும் மெங்கே!
நற்கமலமா யிரத்தெட் டிதழு மெங்கே!
நாலு கையொரு பாதமான தெங்கே!
இப்பொருளை அறிந்துரைக்கும் பெரியோர் தம்மை
இறைவ னென்றே கருதி யியம்பலாமே!


(6)நஞ்சணிந்தான் முகந்தா னைந்து மெங்கே!
ஞானக் கண் மற்றக்கண் மூன்று மெங்கே!
அஞ்ச வுயிர்தனைக் கெடுக்கும் யேமனெங்கே!
ஆயிரங் கண்ணி ந்திரனார் தாமுமெங்கே!
பஞ்சறிவால் நின்ற பராசக்தி யெங்கே!
பதினாலு லோகமெனு மதுதா னெங்கே!
வஞ்சமற பொருளறிந்து சொல் வாராகில்
வணங்கி குருபர னென்று வாழ்த்தலாமே!


(7)நகை பிறந்த விடமெங்கே!கோபமெங்கே!
நர மேழா நரகமான தெங்கே!
திகைத்து மறந்திடமெங்கே நினைப்பு மெங்கே!
தீராத குறைவந்து சூழ்ந்த தெங்கே!  
பகைத்த விடந்தா னெங்கே!ஒழுக்கமெங்கே!
பகலிரவு யிருந்த இடந்தா னெங்கே!
வகை பொருளை அறிந்துரைக்கும் பெரியோர்தம்மை
வணங்கி குருபர னென்று வாழ்த்தலாமே!


(8)ஆறுகால் முகமாறு மான தெங்கே!
அறுபத்து நாலுகலை நின்ற தெங்கே!
சீருகால் பன்னிரண்டில் கழிந்த தெங்கே!
செத்திடமுஞ் சாகாதி ருந்திடமு மெங்கே!
பூருவ நீயிருந்துவந்து பிறந்திடந் தானுமெங்கே!
புந்திதனில் அம்பத்தோர் அச்சரமு மெங்கே!
வேறு பொருளுரையா துள்ளபடியே சொல்வார்
மெல்லடியிலே பணிந்து மெலிய லாமே!


(9)ஆதியிற் சந்திரனும் பிறந்த தெங்கே!
அவரொடுங்கி நிற்குமது விடமு மெங்கே!
சாதிபல ஒன்றாகக் கண்ட தெங்கே!
சத்தி சிவமென்று பிரியாத தெங்கே!
ஓதி உணர்ந்த பூசைமறந்த தெங்கே!
வுச்சிட்ட நிட்டத்தே விடமு மெங்கே!
சோதிபோல் ஞானமொழி பெற்ற பேர்கள்
சொல்லிய தெல்லா முடலில் சொல்லுவாறே!


(10)இருள்பிறந்த விடமெங்கே ஒடுக்கிட மெங்கே!
இரண்டு திரிசங்கு நின்றவிடமு மெங்கே!
அருள்பிறந்து பாடிநின்ற விடமு மெங்கே!
அறுத்தடைத்த வாசலொன்று கண்ட தெங்கே!
திருபிறந்த விடமெங்கே எழுகிணறு மெங்கே!
திருக் கிணற்றை யிறைக்கின்ற யேத்தமெங்கே!
விருப்ப முடனடுக்கு நிலைப் போதகத்தை
விளம்பினோம் மெய்ஞான அறிவுள் ளோர்க்கே!


ஞானி என்று சொல்லிக் கொள்பவர் எவர் ஆனாலும் இந்தப் பத்து பாட்டுக்கும் பொருள் சொல்லி விளக்கினால் மட்டும் குருஜி என்றோ குரு என்றோ அழையுங்கள்.


கு என்றால் அஞ்ஞானம்(இருள்),ரு என்றால் நீக்குபவர் (ஒளியை உண்டாக்குபவர்).குரு என்ற சொல்லுக்கு அஞ்ஞான இருளை நீக்கி ஞான ஒளி உண்டாக்குபவர் என்று பொருள்.


நீங்கள் அழைப்பவர் அதற்குத் தகுதியானவராக இருக்கிறாரா என்று சோதித்து பின் அழையுங்கள் நான் உட்பட! 

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்         

Post Comment

10 comments:

  1. சாட்டையடியான ஒரு விஷயம் ஐயா, பகிர்ந்த தங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  2. நன்றி திரு தேவன் அவர்களே,
    இது சாட்டையடி அல்ல மக்களை சிந்திக்க வைக்க இது போன்ற விஷயங்களை கொடுத்துத்தான் ஆக வேண்டும்.இதையும் மீறி மக்கள் மாறான பாதையில் போனால் அது இறைவன் சித்தம்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  3. குரு என்றால் யார் விளங்கிக்கொண்டேன்

    நன்றி சாமீ ஜி
    உங்கள் அன்பன் ஷரீப்

    ReplyDelete
  4. இந்த பாடலுக்கு விளக்கம் சொன்னால் நன்றாக இருக்கும் சாமீ ஜி

    ஷரீப்

    ReplyDelete
  5. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஷரீஃப் அவர்களே, இந்த பாடலுக்கு விளக்கம்,சித்தர் பாடல்களுக்கு விளக்கம் சொல்ல முடிகின்ற,அகத்தியரின் ஞானப்பாடல்களில் தெளிவு பெற்ற ஒருவரால்தான் கூற முடியும்,அதை புரிந்து கொள்ள குருவாக இருக்கும் ஒருவரால் உபதேசம் பெற்றவரால்தான் புரிந்து கொள்ள முடியும்.உபதேசம் என்பதே சித்தர் பாடல்களுக்கு சாவி.சாவியைப் பெற்றால்தான் உடலாகிய வீடு உங்களுடையதாக இருந்தாலும்,கதவைத் திறந்து உள்ளே உறைந்திருக்கும் உத்தமனைக் காண முடியும்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  6. கு என்றால் அஞ்ஞானம்(இருள்),ரு என்றால் நீக்குபவர் (ஒளியை உண்டாக்குபவர்).குரு என்ற சொல்லுக்கு அஞ்ஞான இருளை நீக்கி ஞான ஒளி உண்டாக்குபவர் என்று பொருள்.

    தெளிவான விளக்கத்திற்கு நன்றி ஐயா..

    ReplyDelete
  7. kadhir srinivasan ssetex@gmail.com

    அன்புள்ள சாமி அழகப்பன் அவர்களுக்கு வணக்கம்.
    தங்கள் பதிவுகளை தினம் ஒரு முறையாவது பார்த்து விடுவேன்.அருமையான விஷயங்களை
    தெளிவாக தெரிவிகிறீர்கள் .
    தங்களது வெப் ல் தமிழில் இந்த கமென்ட் ஐ பதிய முடியாததால் இங்கு மின் அஞ்சல் அனுப்புகிறேன்.
    தங்கள் பதிவில் உள்ள அடுக்கு நிலை போதம் என்ற பாடல்கள் மொத்தம் பத்து மட்டும் தானா?
    அது எந்த புத்தகத்தில் உள்ளது( தாமரை பதிப்பகத்தில்?) என்று தயவு செய்து தெரிவிக்கவும்.
    ஏன் என்றால் , புதுகோட்டை மகான் மெய்வழி சாலை ஆண்டவர்களின் சீடர் ஒருவர் தனது புத்தகத்தில்
    அவர்களின் தீட்சை நாளில் இந்த அடுக்கு நிலை போதத்தை படிக்கச்செய்து அதில்
    உள்ளபடி எல்லாவற்றையும் புரிய வைத்து உடலில் எங்கே முப்புரி நூல் உள்ளது,அகத்து ஈசர் எங்கே
    இருக்கிறார்,திருவடி என்பது என்ன ,அது நம் உடலில் எங்கே உள்ளது என்பது போன்ற விஷயங்களை
    தீட்சையும் செய்து வைப்பார்கள் என்ற விவரங்களை தெரிவித்து இருந்தார்.
    தங்கள் உதவியினால் அந்த பாடல்களை படிக்கும் பாக்கியம் கிட்டியது.மிக்க நன்றி அய்யா
    இது போன்ற பொக்கிஷங்களை தங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்
    தங்கள் பதிலை எதிர்பார்கிறேன்.
    இந்த பதிவையும் தங்கள் சைட்ல் பதிந்தால் எல்லோரும் அறிய வாய்ப்பாகும்.

    என்றும் அன்புடன்,
    கதிர் சீனிவாசன்
    9789720046

    ReplyDelete
  8. அன்புள்ள கதிர் சீனிவாசன் அவர்களே, கருத்துரைக்கு நன்றி, அடுக்கு நிலைப் போதம் என்ற நூல் இருபது சில்லறைக் கட்டடம் என்ற தாமரை நூலக புத்தகத்தில் இருந்தது.அடுக்கு நிலைப் போதம் என்பது பத்துப் பாடல்கள் மட்டுமே.இந்த இடுகையின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு,கருத்துரை எழுதிய முதல் நபர் நீங்கள்தான் என்று கருதுகிறேன்.இந்த இடுகையின் நோக்கம் நிறைவேறிவிட்டது.தற்போது எனது இணைய தளம் இந்த முகவரியில் உள்ளது.http://www.machamuni.com/.அதில்தான் தற்போது கட்டுரைகள் வெளியாகி வருகின்றன.எனவேதான் இந்த வலைப்பூவில் கருத்துரை பதிவை வலைப்பூ உறுப்பினர்கள் மட்டும் பதியுமாறு வைத்துள்ளேன்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  9. அய்யா ஒன்றும் தெரியாதவகளே ஆடும்போது தாங்கள் அளப்பறிய ிஷயங்களை தெரிந்தும் மரமண்டைகளான என்போன்றவற்க்கும் விளக்யருளுதவி செய்யிகவேதான் குரு பதவிக்குதகுதியானவர்

    ReplyDelete
  10. அய்யா ஒன்றும் தெரியாதவகளே ஆடும்போது தாங்கள் அளப்பறிய ிஷயங்களை தெரிந்தும் மரமண்டைகளான என்போன்றவற்க்கும் விளக்யருளுதவி செய்யிகவேதான் குரு பதவிக்குதகுதியானவர்

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்