மொழி பெயர்ப்புக் கருவி

Wednesday, March 30, 2011

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(29)அழுகண்ணியும் தொழுகண்ணியும்

அழுகண்ணியும் தொழுகண்ணியும்
அன்புள்ள பதிவு வாசகர்களே,
சித்தர்களின் மரணம் மாற்றும் மூலிகைகளை(காய கற்பங்கள்) பல நூல்களில் எழுதி வைத்துள்ளனர்.சதுரகிரித் தல புராண வரலாறு,போகர் மலை வாகடம் ,கோரக்கர் மலை வாகடம், புலஸ்தியர் கற்பம் 300, போகர் கற்பம் 200 , திருவள்ளுவ நாயனார் கற்பம் 200, போன்ற நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மலை வாகடம் என்பது என்னென்ன மூலிகைகள் எந்தெந்த இடங்களில் கிடைக்கும் என்பதற்கான குறிப்புக்கள் ஆகும். அந்த மூலிகைகளை தேடி பல காலம் பல இடங்களுக்கு அலைந்துள்ளேன்.


சில அற்புத மூலிகைகளையும் கண்டேன்.அவற்றில் சில வாசக அன்பர்களுக்காக இங்கே தருகிறேன். இதில் தொழுகண்ணி என்ற மூலிகை மனிதன்,மனிதனைக் காணும் போது கை கூப்பித் தொழுவது போல இரு இலைகளையும் ஒன்று சேர்த்து தொழுவதால் இதற்கு தொழுகண்ணி என்று பெயர்.ஒளிக்காட்சியைக் காணுங்கள்.


சூரியன் உச்சியில் இருக்கும் போது தொழுகண்ணியின் இலைகள் சேர்ந்து பிரிவது மிக வேகமாக இருக்கும். சூரியனின் சக்தி இதற்கு அதிக ஆற்றல் அளிப்பதனாலேயே இது நிகழ்கிறது.  


தொழுகண்ணி, அழுகண்ணி, கொட்டைக் கரந்தை (கொட்டைக் கரந்தை மட்டும் பூப்பதற்கு முன் எடுக்க வேண்டும்)இவை மூன்றையும் நிழலிற் காய வைத்து சம எடை எடுத்து கலந்து வைத்துக் கொண்டு தேனிற் குழைத்து உண்ண யானை பலம் உண்டாகும்.நரை திரை மாறும்(வயதாவதால் நரைத்திருக்கும் முடியும், தோலில் விழுந்த சுருக்கமும் போகும்).   







இதில் கோரக்கர் மலை வாகடம் 37 ம் பக்கம் ,54 எண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ள கணை எருமை விருட்சம் என்பது இரவில் 12 மணிக்கு எருமை மாடு போல கத்தும் என சித்தர் நூல்களில் கூறப்பட்டுள்ளது.தித்திப்பான பால் தருவதால் அதற்கு கண எருமை விருட்சம் என பெயரிடப்பட்டதா என்று தெரியவில்லை. 

அந்த இடம் கடுமையான வன விலங்குகள் நடமாடும் இடமாக இருந்ததால் மரம் கத்துமா என்று என்னால் சோதித்துப் பார்க்க இயலவில்லை. அந்த முயற்சி பின்னால் ஒரு வேளை சாத்தியம் ஆகலாம். பொதுவாக சித்தர் நூல்களில் கூறியிருப்பவற்றை கடும் பிரயாசைக்கப்புறமே சோதித்து செய்து பார்த்து அறிய முடிகிறது.


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

Wednesday, March 23, 2011

ஒரு பழம் பெரும் புத்தகம் (கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 5)



ஒரு பழம் பெரும் புத்தகம்,(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 4) என்ற பதிவைப் படித்துவிட்டு இந்த பதிவுக்கு வரவும்.அப்படிப் படித்தால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.


கடுக்காயை செப்டெம்பர் மாத நடுவிலிருந்து நவம்பர் மத்தி வரையில் கடுக்காய்ச் சூரணத்தைக் கற்கண்டுத் தூளுடன்,அல்லது அதுபோன்றவைகளுடன் அனுப்பானித்து ஏன் சாப்பிட வேண்டுமெனின், அக்காலங்களில் பித்தச் சத்தானது அக்கிரமப்படுவது அல்லது கெட்டுவிடுவது சுபாவமாகையால் அதைச் சமப்படுத்த அல்லது சாந்தி செய்ய வேண்டியதற்காகவேயாம்.

நவம்பர் மத்திம பாகத்திலிருந்து ஜனவரி மத்திய பாகம் வரையில் சுக்குச் சூரணத்துடன்,அல்லது அதைப் போன்றவற்றுடன் ஏன் அனுப்பானித்துச் சாப்பிட வேண்டுமெனின், அக்காலங்களில் பித்தங் குறைந்து போவது சுபாவமாகையால்,அவ்விதக் குறைவு நேரிடாதிருப்பதற்காகவேயாம்.

ஜனவரி மத்திம பாகத்திலிருந்து மார்ச்சு மத்திம பாகம் வரை கடுக்காயை அரிசித்திப்பிலிச் சூரணத்துடன் மிஸ்ரமித்து (கலந்து) உட்கொள்ள காரணமாவது,அக்காலங்களில் கபமதிகரிப்பது சுபாவமாகையால், அவ்விதம் அது அதிகரிக்காமலிருப்பதற்காகவேயாம்.

மார்ச்சு மாத மத்திம பாகத்திலிருந்து மே மாதம் மத்திம பாகம் வரையில் கபமானது அக்கிரமப்படுவது அல்லது கெட்டுப் போவது சுபாவமாகையால் 
அதனைக் கிரமப்படுத்த தேனிற் குழைத்து அல்லது அதைப் போன்றவவைகளுடன் மிஸ்ரமித்துச் சாப்பிட வேண்டும்.

மே மாதம் மத்திம பாகத்திலிருந்து ஜீலை மாத மத்திம பாகம் வரையில் வாதமதிகரிப்பது சுபாவமாகையால் அதனைச் சாந்தப்படுத்த   வெல்லத்துடன் அனுப்பானித்துட் கொள்ள வேண்டியது விதியாகும்.


ஜீலை மாதம் மத்திம பாகத்திலிருந்து செப்டம்பர் மாத மத்திம பாகம் வரையில் பித்தமதிகரிப்பது சுபாவமாகையால் கடுக்காயை உப்புடன்,அல்லது அதைப் போன்றவற்றுடன் கலந்து சாப்பிட்டு வர வேண்டும் என்று விதியேற்படுத்தப்பட்டிருக்கிறது. 



இதன் தொடர்ச்சி ''ஒரு பழம் பெரும் புத்தகம்,(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 6)'' என்ற பதிவில் தொடரும்.

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment