மொழி பெயர்ப்புக் கருவி

Saturday, October 16, 2010

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(3)







சுமார் 17 வருடங்களுக்கு முன்னால் நான் வருணிக்கும் இச்சம்பவம் நடந்தது.நான் சென்ற மடலில் குறிப்பிட்டிருந்த ராஜபாளையம் அருகில் உள்ள முறம்பு என்ற ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் செல்லும் வழியில், சிலர் ஒரு கூட்டமாக அங்கே உள்ள கிறித்துவ ஆசிரமத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

நான் ஒலிப்பானை ஒலித்ததும் அந்தக் கூட்டத்தினர் இரண்டாகப் பிரிந்தனர்.நானும் வண்டியின் வேகத்தைக் குறைத்து, அவர்கள் முழுவதும் விலகிய பின்னர் மீண்டும் வேகத்தை அதிகரித்த போது ஒரு எட்டு வயதுப் பெண் குழந்தை வண்டியின் குறுக்கே ஓடி வந்துவிட்டது. மீண்டும் வண்டியின் வேகத்தைக் குறைத்து, நிறுத்தும் முன்  அக்குழந்தைக்கு அடிபட்டுவிட்டது.

அந்தக் குழந்தையோ மயக்கமாகிவிட்டது. எனக்கு பதற்றமாகிவிட்டது. அங்கே உள்ள இலவச மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றோம்.ஆனால் அவர்கள் குழந்தைக்கு அடி பலமாகப் பட்டு இருக்கிறது. நாங்கள் வைத்தியம் பார்த்து குழந்தைக்கு ஏதாவது நேரிட்டால் நாங்கள் பொறுப்பாக முடியாது என்று கூறிவிட்டார்கள். இதைக் கேட்டவுடன் குழந்தையின் சொந்தக்காரர்கள், வருத்தமும் அதன்பின் கோபமும் கொண்டார்கள்.

காவல்,காராக்கிரகம் எல்லாம் என்முன் வந்து என்னை கவலை கொள்ள வைத்தது.இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலையில், எனக்கு நான் கற்ற கலைகளுள் ஒன்றான வர்ம மருத்துவம் என்ற ஒரு அற்புதக்கலை கலை மகள் அருளால் என் கவனத்திற்கு வந்தது.

தொடு வர்மம் 96 ல் உச்சி வர்மத்தில் (கொண்டைக் கொல்லி வர்மம் என்றும் சொல்வார்கள்), தாக்குதல் உற்றிருந்தால் என்ன குறி குணங்கள் ஏற்படுமோ அந்தக் குறி குணங்கள் இருப்பது கண்டேன்.எனவே அதற்கான இளக்கு முறைகளைக் கையாண்டு அந்தக் குழந்தையின் வர்மத்தை இளக்கி மயக்கம் நீக்கினேன்.
அந்த முறைகள் எல்லா வர்ம இளக்கு முறைக்கும் பயன்படும் என்பதால் இங்கே விளக்குகிறேன்.தயவு செய்து இதை எல்லோரும் நல்லதற்கு மட்டுமே பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இது சிறு குழந்தகள் பிறந்தவுடன் உச்சிக்குழி மூடாமல் இருக்கும் இடமே இந்த வர்மம் நிலை கொண்டிருக்கும் இடம்.அதாவது உயிர் உடலின் உள்ளே நுழைந்த வழி இதுவே.எனவேதான் அந்த வழி மூடாமல் இருந்து பின் எலும்பு மூடிவிடும்.உயிர் வர்மத்தால் சாக இருக்கும் போது உயிர் நுழைந்த வழியான இந்த இடத்தை சரி செய்யும் வழியின்மூலம் உயிரை உடலின் இருப்பில் இருக்க உணர்த்தலாம்.அதன் மூலம் உயிரை உடலில் தங்க வைக்கலாம். இந்த முறைகளுக்கு வர்ம அடங்கல் முறை என்று பெயர்.
 உச்சி வர்மம்(கொண்டைக் கொல்லி வர்மம்) 
பாடுவோம் உச்சி நடுவுள்ளம் தன்னில்
பாங்கான அடியிடிகள் தாக்குப்பட்டால்
தேடுவோம் தலை குழைந்து கை கால் சோர்ந்து
தேகமது அசந்துவிடும் மூவைந்துக்குள்
நாடுவோ மிளக்கு முறைதன்னைக் கொண்டு
நல்ல கைப்பாக மதாய்க்குருவும் வைத்து
கூடுவோம் கெந்தி ராசி நாசிக் கேற்றி
கொடுத்திடு பின் கஷாயம் நெய் முறையாய்த்தானே
(தொடுவர்மத் திரட்டு! பாடல் 14)
 உச்சந்தலையின் உச்சியில்,அடி,இடி,தாக்குதல் விழும்போது தலை குழைந்து விழும்கை,கால்கள் சோர்ந்து போகும். இந்த தாக்குதல் உற்றவர்களை மூவைந்து (3x5=15)நாழிகைக்குள் (ஒரு நாழிகை என்பது 24 நிமிடம் எனில் 15x24= 360 நிமிடம்( 6 மணி நேரம்) வர்மத்தை இளக்க வேண்டும் இல்லாவிட்டால் உயிர் உடலில் தங்காது.
அது என்ன 6  மணி நேரம் , அது இரு ஜாமங்கள் , என்பதைக் குறிக்கும், பழந்தமிழரின் நேர கால அளவுகள் துல்லியமானவை. அவை உயிரோட்டத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டவை. வர்ம காலங்கள் மட்டுமல்ல உயிர் பற்றியும் ,வியாதிகள் பற்றியும்ஆறு சிறு பொழுதுகள் ஆறு பெரும் பொழுதுகள் பற்றி விவரமாக,  எனது தாத்தாவின் கையெழுத்துப் பிரதியுடன்அடுத்த பதிவில் இது பற்றி விவரமாகக் காண்போம். 
                   தானான யிளக்கு முறை உரைக்கக் கேளு
தக்கபடி எடுத்திருத்தி உச்சி மீதில்
கோனான கைவிரித்து வைத்து மறுகைகொண்டு
       குத்திடுவாய் பிட்டி மத்தி தன்னில் தானும்
தேனான நாசிமுகம் தடவித் தூக்கி
தெளித்துவிடு முகமதிலே கும்பம் தன்னை
மானான குணமுடைய ஆசானாகில்
       மனது யுக்தி கொண்டு மிக்க வலு செய்வானே!   
(தொடுவர்மத் திரட்டு! பாடல் 15)

உச்சி வர்மம் கொண்ட நோயாளியை தரையில் எடுத்து இருத்தி (உட்காரும் நிலையில் வைத்துக் கொண்டு) உச்சி மீது வர்ம மருத்துவர் தனது இடது கையை விரித்துக் கவிழ்த்தி வைத்து ,அதன் மீது தனது மறு கைவிரல்களை மடக்கி சுண்டு விரல் பகுதி கீழிருக்குமாறு வைத்து ஒரு குத்து போடவும்,மெதுவாக பிட்டியின் மத்தியில் ஒரு அடியும் போடவும்.நாசி ,முகம் தடவித் தூக்கிவிடவும். அடுத்து கும்பத்தில் (ஒரு செம்பில்) நீர் எடுத்து அதில் 'நமச்சிவாய' என்னும் மந்திரத்தை செபித்து , அந்தத் தண்ணீரை முகத்தில் எறியவும்.இந்தச் செயல்களை செய்யும் போது ஆசானிடத்தில் பக்தியுடன் இருக்க வேண்டும்.

இதன் பின் சுக்கை வைத்தியர் தன் வாயிலிட்டு அதன் வேகமான காற்றை மூக்கின் இரு துளைகளிலும், கண்களினுள்ளும் , காதினுள்ளும் ஊத வேண்டும்.இவ்வாறு செய்ய நோயாளி குணமடைவார்.
வர்மத்தை தொடுவர்மம் 96 எனவும் ,படுவர்மம் 12 எனவும் கூறுவர்.ஏற்கெனவே சொன்னது போல் தத்துவங்கள் 96 க்கும் ஒன்றெனவாகும். படுவர்மம் 12ம், உயிரெழுத்துப் பன்னிரண்டையும், அதன் வாயிலாக சூரிய கலை 12 அங்குலம் ஓடுவதையும், குறிக்கும்.
பிற அடுத்த பதிவில் சந்திக்கும் போது பார்ப்போம்.படிக்கும் அன்பர்கள் தயவு செய்து கருத்துரை பதியவும்.இது எனக்கு அடுத்த பதிவு எழுத அவசியம் தேவை.
நன்றி
என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்.   

Post Comment

22 comments:

  1. அருமையான விளக்கம் அய்யா ., கோடான கோடி நன்றிகள் !!

    இப்படிக்கு
    சித்தர் பைத்தியம்

    ReplyDelete
  2. நன்றி சித்தர் பைத்தியம் ஐயா அவர்களே!நாங்களும் சித்தர் பைத்தியங்களே!

    ReplyDelete
  3. அய்யா ,
    தங்களுடைய இந்த காணக் கிடைக்காத அற்புதமான வலைப்பூவை வெறும் பின்னூடம் எழுதுவது மட்டும்மல்லாமல் ., தங்களுடன் இனைந்து "மச்ச முனி சபையில் " பணியாற்ற விரும்புகிறன் ..,,விரைவில் !!

    இப்படிக்கு
    சித்தர் பைத்தியம்

    ReplyDelete
  4. நன்றி பல.எத்தனையோ வலைப்பூக்கள் வெறும் பொழுது போக்குக்கும்.ஒன்றுமில்லாமல் வெறும் நமது புலன்களுக்கு மேலும் மேலும் புலனின்பம் தரும் விதமாகவும்,அதன் விளைவாக மூச்சுக்களை விரயம் செய்து இறப்பை நோக்கி விரையவும் செய்கிறார்கள்.இதை விட்டு விலகி இத்தனை பேர் வந்து பார்வையிட்டு போவதே பெரிய விஷயம்.இதில் அவர்களை இதைப் பார்க்க வைப்பதே பெரிதான விஷயம்.இதில் அவர்கள் கருத்துக்களை அறிய என்ன செய்ய என்றே தெரியவில்லை.'வேகம் கெடுத்தாண்ட விமலனடி போற்றி'என இவர்கள் வேகம் என்று கெடுக்கப்படுமோ,தெரியவில்லை.நின்று கருத்துச் சொல்ல நேரமில்லாமல் ஆடு பச்சை கண்ட இடமெல்லாம் கடிப்பது போல இருக்கும் எனதன்பு மானிடர்களுக்கு நன்றி.
    நன்றி
    இப்படிக்கு
    என்றென்றும் நட்புடன்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  5. அய்யா ,
    "மனிதர்கள் ஆடு பச்சை கண்ட இடமெல்லாம் கடிபதற்கு " காரணம் இது கலியுகம் !!! . ( எ.க ) ஆன்மிககடல் வலைபதிவு ஒன்றில் ["கலிகாலத்தில் காமசுகத்துக்காக மட்டுமே திருமணம் நடக்கும்.அளவற்ற காமம்,எக்கச்சக்கமான பணம்,வரைமுறையற்ற அதிகாரம் இந்த மூன்றையும் அடைவதற்கே ஒவ்வொரு மனிதனும் விரும்புவான்.அப்படி எவன் அல்லது எவளாவது விரும்பாமல் இருந்தாலும்,மற்றவர்கள் மேற்கூறிய மூன்றில் ஏதாவது ஒன்றை மட்டும் கையில் வைத்துக்கொண்டு ஆடும் அகங்காரமான ஆட்டத்தால் அளவின்றி பாதிக்கப்படுவர்.அதன் முடிவாக,அவர்களும் அளவற்ற காமம்,ஏராளமான பணம்,வரைமுறையற்ற அதிகாரம் இவற்றில் ஏதாவது ஒன்றை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரவே ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் வாழ்நாள் செலவழியும். இப்போதே இதுதான் நம்மைச்சுற்றிலும் உள்ள உலகத்தில் நடக்கிறது என்கிறீர்களா?]" இவ்வாறு ஒரு தொகுப்பு

    ஆக நமது மனிதர்கள் , தாம் இது வாராய் செய்த தவறுகள் யுகத்தின் தாக்கமே என்று எண்ணி ., " பல நூறு பிறவிகள் ., மது,மாது, பொன் ,குடும்பம் ,நண்பர்கள் இதர போகங்களோடு இறவற்றோடு கலித்துவிடோம்" . இப் பிறவியில்லாவது பிண்டத்தை விற்று அண்டத்தில் எறி ,ஜோதியில் கலந்து ., சம்தியில் சங்கமிப்போம் என்று எண்ணி பயணத்தை தொடருவோம் ..,

    ReplyDelete
  6. அய்யா. அருமையாக எழுதுகிறீர்கள். நன்றி.
    வர்மாகலை ஒரு தற்காப்பு கலை கூட அல்லவா? அதை கற்றுக்கொள்ள என்ன வழி என்று கூற முடியுமா? இதை கராத்தே போன்று எல்லா இடங்களிலும் கற்று தரருவதில்லையே.

    ReplyDelete
  7. ஐயா புலிப்பாணி,
    தங்கள் கருத்து அப்படியே எனக்கு உடன்பாடுதான். ஆனால் இந்த போக்குக்கு முக்கிய காரணம் இக்காலத்திய உணவு முறையும் ஒரு காரணம்.ஏனெனில் எண்ணமே அன்னம்.மீண்டும் அன்னமே எண்ணமாக விளைகிறது.அதாவது சமைத்தவரின் எண்ணமே அன்னத்தில் உள்ளது.அது மட்டுமல்ல அந்தந்த உணவுக்கும் தன்மைகள் உண்டு.இனி வரும் பதிவுகளில் இதைக் காணலாம்.
    நன்றி
    என்றென்றும் நட்புடன்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  8. ஐயா அனாதி,வர்மம் என்றாலே கர்மம்.அவை இறைவன் போட்டு வைத்த முடிச்சுக்கள்.அதில் தீய நோக்கத்திற்காக கை வைப்பது நாமே நமக்கு வினையை விதைத்துக் கொள்வது போல.எனவே வர்மம் என்பது நீங்கள் நினைப்பது போல் தற்காப்புக் கலைக்கும் உபயோகிக்கலாம்.ஆனால் வர்மம் பிரயோகிக்கப்பட்ட நபர் வாழ்நாள் முழுவதும் குறைபட்ட அங்கத்துடன் உயிர் வாழவும் செய்யலாம் அல்லது,அவர் இறந்தும் போகலாம். அதன் விளைவாக நீங்கள் காராக்கிரகத்துக்கும் செல்ல நேரலாம்.நான் ஏற்கெனவே சித்த்ர்கள் ராச்சியம் தோழி வர்மம் பற்றி எழுத ஆரம்பித்தவுடன் நான் எழுதிய கருத்துரையையும் கொஞ்சம் பாருங்கள். http://siththarkal.blogspot.com/2010/10/blog-post_09.html
    http://siththarkal.blogspot.com/2010/10/blog-post_04.html
    நன்றி
    என்றென்றும் நட்புடன்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  9. ஐயா ,
    சத்தியமான வார்த்தைகள் !!பதிவை தொடருங்கள் ஆவலாக இருக்கிறோம்..,
    இப்படிக்கு
    சித்தர் பைத்தியம்

    ReplyDelete
  10. தங்களின் உடனடியான பதில் எனக்கு நேரே இருந்து நீங்கள் பேசுவது போல் உள்ளது.மற்றொரு பதிவு தயாராகி வருகிறது.அதைக் கோர்வையாக்கிக் கொண்டிருக்கிறேன்.இன்னும் இரண்டொரு நாளில் வெளியாகிவிடும்.
    நன்றி
    என்றென்றும் நட்புடன்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  11. நண்பரே தற்செயலாக தஙகள் தொகுப்பைப் படித்தேன். உஙளுடன் தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொள்கிறேன். நன்றி.
    கவிஞர்.செல்வரஜன்.
    email;- kavingarselvarajan@gmail.com

    ReplyDelete
  12. நன்றி கவிஞர் செல்வராஜன் அவர்களே!!!!
    தொடர்ந்து தொடர்பு தொடரட்டும்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  13. ஐயா!
    கோமாவில் இருக்கும் நபர்களை வர்ம வைத்தியத்தால் எழுப்ப முடியுமா?
    தயவு செய்து பதில் சொல்லவும், மிக்க நன்றி.

    ReplyDelete
  14. அன்புமிக்க திரு அனாதி அவர்களே,
    உள்ள வியாதிகளில் 99 சதவிகித வியாதிகள் வர்ம தாக்குதல் நடந்து அது நமக்குத் தெரியாமலே விளைவுகளைத் தருகின்றது என்று கூறுகின்றன வர்ம நூல்கள்.ஆகவே கோமா மட்டுமல்ல மேற்கூறியவாறு தொண்ணூற்றொன்பது சதவிகித வியாதிகளை இவ்வாறு குணமாக்கலாம்.நானும் எனது அக்கு பஞ்சர் ஆசிரியரான திரு எம் என் சங்கர் அவர்களும் மதுரையில் கோமாவில் இருந்த அவர் மாணவரின் தாயை(3 வருடங்களாக கோமாவில் இருந்தவர்)சுக்கை ஆசிரியர் வாயில் போட்டு மென்று நோயாளரின் கண்,காது,மூக்கு ஆகியவற்றில் சுக்குக் காற்றை ஊதி,வர்ம திறவு கோலான உச்சி வர்மத்தில் தட்டி கோமா நோயாளரை எழுப்பிவிட்டுள்ளதை நேரில் கண்டு கற்றுள்ளேன்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  15. அருமையான பதிவு. வர்மம் பற்றி பாடலுடன் உங்கள் விளக்கம் அருமை.
    ஐயா ஒரு நாளைக்கு 60 நாழிகை அதில் 15 நாழிகை என்பது 6 மணிநேரம் ஆகும் நீங்கள் 3 மணிநேரம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்

    ReplyDelete
  16. அன்புமிக்க திரு சந்துரு அவர்களே,
    கருத்துரைக்கு நன்றி!!!!!
    தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.மேலே உள்ள கால அளவுகள் சரிதான்.பெருக்கிப் போடும்போது நிகழ்ந்த தவறு.தவறுக்கு வருந்துகிறேன்.தவறு திருத்தப்பட்டிருக்கிறது.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  17. ஐயா உங்களின் இந்த பதிப்பு மிகவும் நன்றாக இருந்தது
    வர்ம மருத்துவத்தை எப்படி கற்று கொள்ளவது

    ReplyDelete
  18. மிகவும் பயனுள்ள பதிவு. இதுபோல் என்றும் சிறந்த பதிவுகள் தங்கள் மூலம் எங்களுக்கு கிடைக்க இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன். நன்றி ஐயா!!!
    ஓம் சிவசிவ ஓம்!

    ReplyDelete
  19. i parthiban, your link is excellent, my mother (65age)past 40 years deaf,

    and she also tamil pandit, please how to recover my mother Ear problem.

    ReplyDelete
  20. i parthiban, your link is excellent, my mother (65age)past 40 years deaf,

    and she also tamil pandit, please how to recover my mother Ear problem.

    ReplyDelete
  21. அருமையான பதிவு ஐயா! பகிர்வுக்கு நன்றி.
    மு மல்லிகா,மலேசியா.

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்