மொழி பெயர்ப்புக் கருவி

Saturday, January 15, 2011

பொங்கல் ஸ்பெஷல்(பாகம் 1)

முதலில் வாசக அன்பர்களுக்கு என் மனம் கனிந்த அன்பார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
பொங்கலுக்கு நம் எல்லோர் வீட்டிலும் மாவிலையும்,கண்ணுப் பூழை என்றழைக்கப்படும் கூரைப் பூவும் ( சிறு கண் பீழை ) மாவிலையும் கூரையில் வைத்துக் காப்புக் கட்டுவார்கள்.நமது முன்னோர்கள் சொல்லிவிட்டார்களென்று நமது வாகனங்கள் முதல் வைத்துவிடுவோம்.

நமது பழந்தமிழர் வாழ்வியலில் பல விடயங்கள் பொருள் புரியாமல் பின்பற்றுவதால்,மாவிலைத் தோரணம் பிளாஸ்டிக் மாவிலைத் தோரணமாக மாறும் அளவிற்குப் போய்விட்டது.பிளாஸ்டிக் மாவிலைத் தோரணத்தினால் ஒரு பயனும் இல்லை. 

மாவிலையும், சிறு கண் பீழையும் சேர்த்து வைத்து,வீட்டில் சொருகி வைக்கும் போது அவற்றில் இருந்து வரும் மூலிகைக் காற்றின் சக்தி, பனிக்காலத்தில் காற்றில் கலந்திருக்கும் கிருமிகளை அழித்தொழித்து நம்மைக் காக்கும்.இதையே காப்புக் கட்டுவது என்றழைக்கிறார்கள்.

அது மட்டுமல்ல பனிக்காலத்தில்,குளிர்ச்சி அதிகம் இருப்பதால், நாம் தண்ணீர் சரியாகக் குடிக்க மாட்டோம்.ஆனால் பனி குளிர்ச்சியாகத் தெரிந்தாலும் இயல்பில் அது மிகவும் உஷ்ணமானது.எனவேதான் வறட்சியில் தோல், உதடுகள், முகம் போன்றவை வறண்டு வெடிக்கின்றன.

அப்போது சிறு நீரகம் செயல் படத் தேவையான தண்ணீர் இல்லாததால் சிறு நீரகம் தள்ளாடத்துவங்கும். அந்த நேரத்தில் மாவிலையும், சிறு கண் பீழையும் சேர்த்து கஷாயம் வைத்து குடிக்க வேண்டும் என்பதற்காகவே, பொங்கலன்றாவது வீட்டில் சொருகி வைத்து ஞாபகப்படுத்துகிறார்கள்.


சிறுநீரகக் கல்(URINARY COLIC),சிறுநீரகக் கோளாறுகள்(NEPHRITIS),சிறுநீரக வடிகட்டும் வலை அமைப்பு பூராவும் அடைத்துக் கொள்ளும் நிலையில் சிறுநீரகம் சுருங்கிவிடும்,தண்ணீர் நிறைந்து கிடக்க வேண்டிய சிறுநீரகம் கருவாடு போல வற்றிச் சுருங்கும் நிலையே KIDNEY FAILURE, இரத்தத்தில் யூரிக் அமில அதிகரிப்பால் மூட்டுகளில் ஏற்படும் எலும்புத் தேய்மானம்,இவற்றை அடியோடு துடைத்தெரியும் வல்லமை உள்ளது மேற்கண்ட மூலிகையான கூறைப்பூ.
சிறு கண் பீழை
(கண்ணுப் பூழை,கூரைப் பூ)
பாண்டு பெரும்பாடு பகர்மூத் திரக்கிரிச்சரம்
பூண்டதிரி தோடமிவை போகுங்காண்-தாண்டிப்
பறியவே ளைத்துரத்தும் பாரவயிற் கண்ணாய்
சிறிய பீளைக்கு சிதைந்து.
(வாத, பித்த, கபம் இவற்றால் ஏற்படும் தோஷங்களால்தான், வியாதிகள் ஏற்படுகின்றன். இவற்றை திரி தோடம் என்பார்கள். முத்தோடத்தினால் ஏற்படும் மூத்திர கிரிச்சரத்தையும் இது தீர்க்கும்,மூத்திர கிரிச்சரம் என்பது சிறு நீரக மண்டலத்தில் ஏற்படும் வியாதிகளைக், குறிப்பிடுகிறது)
நீரடைப்பு கல்லடைப்பு நீங்காக் குடற்சூலை
போரடரி ரத்தகணம் போக்குங்காண்-வாரிருக்கும்
பூண்முலையே கேளாய் பொருத்துஞ் சிறுபீளை
யாமி துகற்பேதி யறி.
நீரடைப்பு,கல்லடைப்பு,குடற்சூலை(வயிற்றில் வலி உண்டாக்கும் வயிற்றுப் புண்,அடி வயிற்று வலி,அதிக சூட்டினால் உண்டாகும் அடி வயிற்று வலி) ரத்தம் கெட்டுப் போவதால் உண்டாகும் வியாதிகளைத் தீர்க்கும் வல்லமையுள்ளது சிறுகண் பீழை.


சிறுநீரக செயலிழப்பால் துயரமுறும் நபர்கள் அதிகம் பேர் என்னிடம் தொடர்பு கொண்டு பேசியதால்,கடந்த இரு வாரங்களாக பதிவுகளே எழுதாமல் இருந்த நான் இப்போது இந்தப் பதிவை இடுகின்றேன்.
       
கீழ்க்கண்ட மருந்துகளைக் கலந்து வைத்துக் கொண்டு, இரு வேளைகள் உள்ளுக்கு சாப்பிட உபயோகித்தால் சிறுநீரகக் கோளாறுகள்(NEPHRITIS) நீங்கி மிக்க நலம் தரும்.இந்தப் பொடியோடு அனுப் பானமாக(அனுப்பானம் என்பது மருந்துடன் சேர்த்து கொடுக்கப்பட்டு மருத்தின் செயல்படும் தன்மையை அதிகரித்து குறிப்பிட்ட விதத்தில் இட்டுச் செல்லக் கூடியதே) இளநீர் உபயோகிக்க சிறுநீரகத்திற்கு இது உயிரோட்டத்தை உண்டாக்கும் தேவாமிர்தமாக செயல்படும்.

(1) கல்நார் பற்பம்(IMPCOPS தயாரிப்பு மட்டுமே வாங்கவும்) ----- 10 GRAMS
(2) சிலா சத்து பற்பம்((IMPCOPSதயாரிப்பு மட்டுமே வாங்கவும்) ----- 10 GRAMS
(3) ஆமையோட்டு பற்பம்(IMPCOPS தயாரிப்பு மட்டுமே வாங்கவும்) ----- 10 GRAMS
(4) நண்டுக்கல் பற்பம்(IMPCOPS தயாரிப்பு மட்டுமே வாங்கவும்) ----- 10 GRAMS
(5) படிகார பற்பம்(IMPCOPS தயாரிப்பு மட்டுமே வாங்கவும்) ----- 10 GRAMS
(6) சிருங்கி பற்பம்(IMPCOPS தயாரிப்பு மட்டுமே வாங்கவும்) ----- 10 GRAMS
(7) பலகரை பற்பம்(IMPCOPS தயாரிப்பு மட்டுமே வாங்கவும்) ----- 10 GRAMS
(8) ஆனை நெருஞ்சில் பொடி(சொந்தத் தயாரிப்பாக இருந்தால் நல்லது) - 50GRAMS
(9) சிறுகண் பீழைப் பொடி(சொந்தத் தயாரிப்பாக இருந்தால் நல்லது) - 50GRAMS
(10) சிறு நெருஞ்சில் பொடி(சொந்தத் தயாரிப்பாக இருந்தால் நல்லது) - 50GRAMS


சிறு நெருஞ்சில்
நல்ல நெருஞ்சிலது நாளுங் கிரிச்சரத்தை
வல்ல சுரமனலை மாற்றுங்காண்-மெல்லியலே
மாநிலத்திற் கல்லடைப்பும் வாங்காத நீர்க்கட்டுங்
கூனுறுமெய் வாதமும்போக் கும்
(வாத, பித்த, கபம் இவற்றின் திரிபால், ஏற்படும் மூத்திர கிரிச்சரத்தையும் இது தீர்க்கும்,வலிமையான சுரம், உட்சூடு,தேக எரிவு,கல்லடைப்பு,சிறு நீரக செயலிழப்பால் உடம்பில் தேங்கும் நீர்க்கட்டை உடைத்து அதிகமான கெட்ட தண்ணீரை வெளியேற்றும்.உடம்பை நிமிரவிடாது செய்யும் வாதம்,வெட்டை இவற்றை நெருஞ்சில் போக்கும்.)
மேகவெட்டை நீர்ச்சுறுக்கு வீறுதிரிதோஷம்புண்
வேகசுர தாகவெப்பை விட்டோட்டும்-போகத்
தருஞ்சின் மதலைமொழித் தையலே! நல்ல
நெருஞ்சி லதனை நினை.
மேக வெட்டை என்பது பெண்ணின்பத்தாலோ, அல்லது தேகச்சூடு அதிகரிக்கும் வண்ணம் உடலுறவு வைத்துக் கொள்வதாலோ,அதிக நேரம் இரவில் கண்விழித்துவிட்டு,பகலில் அதிக நேரம் தூங்குவதாலோ,உடற்சூட்டை அதிகரிக்கும் லாகிரி வஸ்துக்களான மூக்குப் பொடி,டீ,காப்பி,பீடி,சிகரெட்,வெற்றிலை பாக்குடன் புகையிலை சேர்த்து உபயோகித்தல், மது வகைகள் இவற்றை உபயோகிப்பதால் உருவாவது.இந்த மேகவெட்டை,நீர்ச்சுருக்கு,வீரியமுடைய திரி தோஷம்,அதி வேகமுடைய சுரம்,அதீத தாகம்,உடல் வெப்பம்,தேக காங்கை,இவற்றைத் நெருஞ்சில் தீர்க்கும்.
சூரணங்கள் அதாவது மூலிகைப் பொடிகள் 6 மாதங்கள் மட்டுமே ஆயுள் எனவே அவற்றை நாமே தயாரித்தால்தான் முழு பலத்துடன் இருக்கும்.மேலும் மூலிகைகளை நிழலில் உணர்த்தித்தான் தயாரிக்க வேண்டும்.அரைக்கும் போது அதிகம் சூடாகி வெந்து போகாமல் பொடியாக்க வேண்டும்.அப்போதுதான் மூலிகைகள் முழு பலத்துடன் செயல்படும்.

அவற்றை கல்வத்தில்(மருந்தரைக்கும் குழியம்மியில் வைத்து  அரைக்க வேண்டும்).இப்படி அரைக்கும் போது அதிகம் சூடாகி வெந்து போகாது.இப்படி இதைத் தயாரித்து கொடுத்தால் நூறு சதவிகிதம் பலன் தரும்.


இங்கே ஒரு சுவாரசியமான விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.எனது தாத்தாவின் மருத்துவக் குறிப்புகளில் (1) கல்நார் பற்பம்(சிறுநீரகம்,பிறப்புறுப்பு மண்டலம்),(2) சிலா சத்து பற்பம் ( எலும்பு மண்டலம், உடலின் அத்தனை உறுப்புக்கள்,சிறுநீரகம்,பிறப்புறுப்பு மண்டலம்),(3) ஆமையோட்டு பற்பம் (எலும்பு மண்டலம், வயிறு, கல்லீரல், மண்ணீரல்), (4) படிகார பற்பம் (குடல்புண்,சிறுநீரகம்), (5)சிருங்கி பற்பம்(எலும்பு மண்டலம்,இதயம்,இரத்தக் குழாய்கள்).


மேற்கண்ட ஐந்து பற்பங்களை கலந்து வைத்துக் கொண்டு அதை ஒரு திருநீற்றுப் பையில் போட்டு வைத்துக் கொண்டு ஏதாவது கோயிலில் சாமியார் போல் உட்கார்ந்து இருந்தால்,வரும் நபருக்கு வெறும் விபூதியை இட்டுவிட்டு,கலந்து வைத்திருக்கும் பற்பக் கலவையை ஒரு சிட்டிகை எடுத்து விபூதியை வாயில் போடுவது போல போட்டுவிட்டால்,அந்த நபருக்கு எந்த வியாதி இருந்தாலும் போய்விடும்.


இந்த சாமியாரிடம் விபூதி போட்டவுடன் எனக்கு இருந்த வியாதியெல்லாம் போய்விட்டது என்று கூறுவார்கள்.சாமியாரின் சக்தி பற்றி ஊரெல்லாம் பேசுவார்கள் என்று எழுதி வைத்திருக்கிறார்.


போலிச் சாமியார்களை ஒழிக்க எண்ணும் போது போலிச் சாமியார்களுக்கு ஐடியா கொடுக்கிறீர்களே என்று கேட்காதீர்கள்.இந்தப் பற்பக் கலவையின் ஒரு சிட்டிகையே இந்தளவுக்கு சக்தி உள்ளதென்றால் இதன் பெருமையை என்னவென்று சொல்வது.அதை விளக்கவே இதை உங்களுக்கு கூறினேன்.         

 அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

11 comments:

  1. இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பொங்கல் வாழ்த்துரைக்கு மிக்க நன்றி திரு வினோதினி அவர்களே,
    தங்களுக்கும் எனது தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்,என்ன வலைப்பூவின் பக்கம் காணோம் என்று நினைத்தேன்.அடிக்கடி வாருங்கள்.கருத்துரைகளும் எழுதுங்கள்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  3. பதிவிற்கு நன்றி ஐயா
    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. பொங்கல் வாழ்த்துரைக்கு மிக்க நன்றி திரு JAIMANIKA அவர்களே,
    தங்களுக்கும் எனது தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்,
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  5. இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. பொங்கல் வாழ்த்துரைக்கு மிக்க நன்றி திரு பாவா ஷெரீஃப் அவர்களே,
    தங்களுக்கும் எனது தமிழர் திருநாள் வாழ்த்துக்கள். மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  7. தங்களுக்கு எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் உபயோகமான நல்ல விஷயங்களை பதிவில் அளித்து எங்களனைவருக்கும் பொங்கல் பரிசு அளித்தமைக்கு மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  8. பொங்கல் வாழ்த்துரைக்கு மிக்க நன்றி திரு மணிகண்டன் அவர்களே,
    தங்களுக்கும் எனது தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்,
    இறைவன் கொடுக்கிறான்.பெற்றுக் கொள்ளுங்கள்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  9. Very Informative. Very glad that a person from our native place is having such great knowledge about these valuable things....

    Keep posting.... Best wishes for pongal...

    ReplyDelete
  10. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு சங்கர் குருசாமி அவர்களே,
    தங்களது ஊர் எனது ஊரா! சந்தோஷம்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  11. சிலாசத்து பற்பம் எங்கு கிடைக்கும்?

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்