மொழி பெயர்ப்புக் கருவி

Wednesday, June 29, 2011

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(29)

அன்புள்ள பதிவு வாசகர்களே,
மூலிகைகளைப்பற்றிய எனது கட்டுரை இந்த வார ராணி வார இதழில் வெளியாகியுள்ளது.அன்பர்கள் படித்து பயன் பெற வேண்டுகிறேன்.



நன்றி:-ராணி வார இதழ்
இந்தக் கட்டுரை வெளி வர உதவிய அன்பர் திரு இரா சின்னதுரை அவர்களுக்கும், ராணி இதழ் ஆசிரியர் அவர்களுக்கும் நன்றி.


நான் ராணி வார இதழுக்கு அனுப்பி வைத்த முழுக் கட்டுரையும் நமது வலைப் பூ அன்பர்களின் பார்வைக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது !!!
சிறப்பான தமிழ் உலகில்  சித்த மருத்துவம் என்பது மிகச் சிறப்பானது . அந்த சித்த மருத்துவத்தில் மூலிகைகளின் பங்கு மகத்தானது . மூலிகைககள் இல்லையேல் சித்த மருத்துவமே இல்லை எனலாம் ." எனவேதான் வேர் பாரு தழை பாரு மிஞ்சினக்கால் பற்ப செந்தூரம் பாரே " என்று கூறுவார்கள் . அதாவது மூலிகைகளினால் முடியாத அல்லது தீராத வியாதிகளுக்கு மட்டும் பற்ப ,   செந்தூரங்களினால் வைத்தியம் பார்க்க வேண்டும் . அந்த மூலிகைககள் என்பது சிறப்பான உணவு (SPECIAL FOOD)என்பதே.அவை குறிப்பிட்ட உடலுறுப்புக்களில் வேலை செய்து நம் உடல் நலனைப் பேணுகின்றன.

அந்த சிறப்பான உணவை (SPECIAL FOOD) எப்படி உணவில் சேர்த்துக் கொண்டால் நம் நோயின்றி வாழலாம் என்பதை இங்கு விவரிக்க இருக்கிறோம் . இதை சித்த மருத்துவத்தில்  நோயணுகா விதி என்பார்கள்.அதாவது நோய் வரும் முன்னர் நம் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டிக்  கொண்டு நோயை வரவிடாமல் தடுப்பதே . வந்த பின் துன்புறுவதைவிட வருமுன்னர்க் காப்பது எளிதல்லவா ! 
சட்னி , துவையல் , மசியல் , ஆவியில் வேக வைத்த உணவுகள் , களிகள் ஆகியவை நம் நம் தமிழ் சித்த உணவில் சிறப்பானவை.ஏனெனில் இவை அதிகம் தீயால் பாதிப்படையாமல் சமைத்த  உணவுப் பதார்த்தங்கள் ஆகும் . உணவு சமைத்தலில் நள பாகம் , பீம பாகம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் . 
நள பாகம் என்பது நெருப்பால் உணவை பக்குவம் செய்து சமைப்பது. இது உணவை மேலும் கேடடையச் செய்வதோடு சத்துக்களை வீணாக்கும் .உணவின் நச்சுத்தன்மையை அதிகரிக்கும் .இயற்கை சித்த உணவில் நெருப்பை அழிக்கும் சக்தி என அழைப்பர் . 
பீம பாகம் என்பது சூரிய வெப்பத்தினாலும் , பூமியின் உஷ்த்தினாலும் ,இயற்கையான முறையில் உணவில் உள்ள சத்துக்கள் கெடாமலும் ,  சமைப்பதே ஆகும்.இயற்கை சித்த உணவில்  இந்த சூரிய வெப்பமும் , பூமியின் உஷ்ணமும் ஆக்கும்  சக்தி   என அழைப்பர் . இவை இரண்டும்தானே தாவரங்களையும் இந்த உலகத்தையும் இந்த இரண்டு வெப்பமும்தான் உருவாக்கி காத்து வருகிறது . இந்த முறையில் சமைக்கும்போது உணவு கருகுவதில்லை .
கருகும் உணவே கேன்சர் காரணியாகிறது .எனவேதான் ஹோமியோபதியில் கார்போ வெஜ் (கருகிப்போன தாவரங்களின் கரி ) ,  கார்போ அனிமாலிஸ் (கருகிப்போன விலங்குகளின் கறி ), போன்ற கருகிப்போன உணவுகளை வீரியப்படுத்தித் தருகிறார்கள் .அதாவது எது எதனை உண்டாக்குமோ அதுவே அதனைத் தீர்க்கும் என்பதே ஹோமியோபதியின் அடிப்படைக் கொள்கை  .இது பற்றிய  மேலதிக விபரங்களுக்கு   கீழ்க்காணும் வலைத்தலத்தில் காண்க.                 
துவையல் :- 
முழுக்க முழுக்க பச்சையாகவே  கீரை வகைகளை  துவையலாக செய்து உண்பது.
முடக்கத்தான்   துவையல் :- 
 முடக்கத்தானை முடக்கு அறுத்தான் என்பர் .அதாவது கைகால்களில் ஏற்படும் முடக்கை அறுத்து ஒழிப்பதனால்தான் அதற்கு இந்தப் பெயர் வந்தது.   முடக்கத்தானை எடுத்து  இலேசாக வதக்கி(வதக்குவதற்கு பதிலாக வெயிலில் வைத்து எடுத்துக் கொள்வது சிறப்பு ) அத்துடன் சிறிது கடலைப்   பருப்பு அல்லது பாசிப்பருப்பு , உப்பு , புளி ,மிளகு, சீரகம் ,வெள்ளைப் பூண்டு ,பெருங்காயம்    சேர்த்து அரைத்து எதனோடும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம் .
பயன் :-
இதனால் வாதங்கள் 80ம் தீரும்.கை கால்களில் ஏற்படும் பிடிப்பு ,வாத வலி இவை தீரும். நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளை நீக்க வல்லது.உடலில் ஏற்படும் வாய்வுப் பிடிப்பை தீர்க்க வல்லது .பக்க வாதம் வருவதை தடுக்க வல்லது .இரத்தக் கொதிப்பை வரவிடாமல் தடுக்கும் சக்தி உள்ளது . மலச்சிக்கலை போக்க வல்லது .மலச் சிக்கலால் வரும் மூலக்கடுப்பை மாற்ற வல்லது.
பின் குறிப்பு :-எங்காவது பயணம் செல்லும்போது இதை சாப்பிட வேண்டாம் .ஏனெனில் இது நல்ல மலமிளக்கி ஆதலால் சிலருக்கு இது பயணத்தின் போது அஸௌகரியத்தை உண்டாக்கலாம் .இதனால் நன்மையே அதிகம் .   
படம் :-இணைப்பு 1 (முடக்கத்தான், முடக்கு அறுத்தான்)
முடக்கத்தான்
சூலைப் பிடிப்பு சொறி சிரங்கு வன்கரப்பான்   
காலைத் தொடுவளியுங் கண்மலமுஞ் - சாலக்
கடக்கத்தா னோடிவிடுங் காசினியை விட்டு 
முடக்கற்றான் ன்னை மொழி.
            ( பதார்த்த குண விளக்கம் )                   
தூதுவளை துவையல்: - 
தூதுவளையை எடுத்து நெய் விட்டு இலேசாக வதக்கி(வதக்குவதற்கு பதிலாக வெயிலில் வைத்து எடுத்துக் கொள்வது சிறப்பு )   அத்துடன் சிறிது கடலைப்   பருப்பு அல்லது பாசிப்பருப்பு , உப்பு , புளி ,மிளகு,மல்லி(தனியா ) , சீரகம் ,வெள்ளைப் பூண்டு  சேர்த்து அரைத்து எதனோடும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம் .
பயன் :-
இதனால்  சளி , இருமல் , சலதோடம் , இளைப்பு  , ஈளை , காசம் , ஈசனோபிலியா , காதில் வரும் மந்தம், காதில் வரும் எழுச்சி என்ற கட்டிகள் , தோலில் ஏற்படும் தினவு ,அரிப்பு ,முத்தோஷம் (வாத ,பித்த ,சிலேற்பன தோஷம் ) உட்சூலை ,தாது நட்டம்,  ஆகியவை குணமாகும் .
படம் :-இணைப்பு 2 ( தூதுவளை )
 தூதுவளை 
காதுமந்தங் காதெழுச்சி காசந் தினவுமது
மோதுமாந்த முத்தோஷ முட்சூலை - தாதுநட்ட
மீதுளைப் பத்திரியை மேவச் செய் வாராய்ந்தோர்
தூதுளைப் பத்திரியைத் துய்த்து .     
                  ( பதார்த்த குண விளக்கம் )  
பிரண்டைத் துவையல் :- கொழுந்துப் பிரண்டையை நன்றாக நார் போக்கி நல்ல பசுவின்  நெய்விட்டு வதக்கி ,  புளி அதிகஞ் சேர்த்து (இல்லை என்றால் நாக்கு ,தொண்டையில் அரிப்பை உண்டாக்கும்) , அத்துடன் சிறிது கடலைப்   பருப்பு அல்லது பாசிப்பருப்பு , உப்பு , புளி ,மிளகு,மல்லி(தனியா ) , சீரகம் ,வெள்ளைப் பூண்டு  சேர்த்து அரைத்து எதனோடும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம் .
பயன் :-
இதனால் உடல் வஜ்ஜிரம் போல் இறுகும். இதனால் பிரண்டைக்கு  வஜ்ஜிர வல்லி என்று பெயர்.பிரண்டையை சாப்பிட்டு வர வயிற்றுப்புண் என்ற அல்சர் கிட்ட வரவே வராது .வயிற்றுப்புசம் ,மாந்தம் , சோறு சாப்பிடப் பிடிக்காமை(அன்னத்துவேஷம் ) ,செரிமானமின்மை , மூலம் ,கபம் ,கை கால் அசதி ,ஓய்ந்த நடை , பசி நன்றாக எழும்பும் .எலும்பு முறிவேற்பட்டவர்கள் இதை சாப்பிட்டு வர எலும்பை ஒன்று கூட வைக்கும்.       
படம் :-இணைப்பு 3 (பிரண்டை ,வஜ்ரவல்லி)



பிரண்டை
மாந்தம் வயிற்று வலி வாயுவதி சாரமுளை 
சேர்த்தமூ லங்கபமுட் செம்புனற்போக் - கோய்ந்தநடை
யெல்லா மகலு மெழும்பு மதிகபசி 
மல்லார் பிரண்டையுண்டு வா . 
             ( பதார்த்த குண விளக்கம் )
நிலாவரைத் துவையல்;- (Cassia senna )(Cassia occidentalisநிலாவரையை (இதுவே நில ஆவாரை என்றும் ,நிலவாகை என்றும் அழைக்கப்படுகிறது)எடுத்து  இலேசாக வதக்கி அத்துடன் சிறிது கடலைப்   பருப்பு அல்லது பாசிப்பருப்பு , உப்பு , புளி ,மிளகு, சீரகம் ,வெள்ளைப் பூண்டு ,பெருங்காயம்    சேர்த்து அரைத்து எதனோடும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம் .
பயன் :-நிலாவரையை உண்ண பற்பல மூல வாயுக்கள் ,சுரம்,சீழ்ச்சிரங்குகள், வயிற்றுவலி ,வயிற்றை உப்பச் செய்கின்ற மலக்கட்டு இவைகளை நீக்கும் .   
நிலாவரை யின் குதானீகேண் மயிலே 
பலமூல வாயுவெப்பு பாவைச் -சிலகிரந்தி
பொல்லாத குன்மம் போருமுமலக் கட்டுமுத 
லெல்லா மகற்றுமென வெண் .   
           ( பதார்த்த குண விளக்கம் )
படம் :-இணைப்பு 1 (நிலாவரை,நில ஆவாரை ,நிலவாகை )
நிலாவரை

நிலாவரையின் ஒரு சிறப்பு மருத்துவம்:- நிலாவரையின் வேரை உரைத்து தேள்கடித்த இடத்தில் போட வலி உடனே நீங்கும்.விஷத்தை நீக்குவதில் அவ்வளவு வல்லமை வாய்ந்தது.

ரசம் :-
ரசம் என்பது மருத்துவத்தில் கஷாயம் என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது . ரசமான இது  மற்ற ( சூரங்கள் ,லேஹியங்கள், போன்றவற்றை )   விட, இலகுவாக ஊடுருவி உடலில் சேன்று வேலை செய்யும் .ஏனெனில் இதில்  அதிகம் அணுப்  பிரமாணமாக மருந்து மூலக் கூறுகள்  ஆக்கப்படுவதால்  இதற்கு நோய் போக்குவதில் அதிக சக்தியுண்டு .ரசம் உமிழ் நீர் உற்பத்தியைத் தூண்டுவதால், உமிழ் நீரில் உள்ள சுண்ணாம்புச் சத்து சீரண சக்தியைத்  தூண்டுகிறது .அத்துடன் வயிற்றில் சுரக்கும் அதீத அமிலச் சுரப்பை கட்டுப்படுத்துகிறது .செரிமானத்தின் பின்னர் வயிற்றில் ஏற்படும் அசௌரியங்களை களைகிறது.    
முடக்கத்தான்   ரசம் :- 
சாதாரண ரசம் வைக்கும் போது உபயோகிக்கும்  பொருட்களுடன் (மிளகு ,சீரகம்,மல்லி(தனியா )  ,புளிக்கரைசல் , வெள்ளைப் பூண்டு , புதினா ,கொத்தமல்லித் தழை  )   முடக்கத்தானையும் சேர்த்து ,நுரை சேர்ந்த பின்   கொதிக்கும் முன் இறக்கி வைத்து உபயோகிக்கவும்.
பயன் :-
முடக்கத்தான் துவையலுக்கு உள்ள அனைத்துப் பயன்களும் இதற்கும் உண்டு . ஆனால் ரசம் என்பது மருந்துத் தன்மை  மிக விரைவாக உடலில் ஊடுருவி விரைவில் பலன் தரும்.
தூதுவளை ரசம் : -
சாதாரண ரசம் வைக்கும் போது உபயோகிக்கும் பொருட்களுடன் (மிளகு ,சீரகம்,மல்லி(தனியா )  ,புளிக்கரைசல் , வெள்ளைப் பூண்டு , புதினா ,கொத்தமல்லித் தழை  )   தூதுவளையையும் சேர்த்து ,நுரை சேர்ந்த பின்   கொதிக்கும் முன் இறக்கி வைத்து உபயோகிக்கவும்.

பயன் :-
 தூதுவளைத் துவையலுக்கு உள்ள அனைத்துப் பயன்களும் இதற்கும் உண்டு . ஆனால் ரசம் என்பது மருந்துத் தன்மை  மிக விரைவாக உடலில் ஊடுருவி விரைவில் பலன் தரும்.

முசு முசுக்கை ரசம் : -
இரு குரங்கின் கை என்றழைக்கப்படும் முசுமுசுக்கை அற்புதமான கற்ப மூலிகையாகும். முசு என்றால் குரங்கு என்று பொருள் .இதில் இருமுறை முசு வருவதால் இதை சித்தர்கள் இரு குரங்கின் கை என்பார்கள்.
சாதாரண ரசம் வைக்கும் போது உபயோகிக்கும்  பொருட்களுடன் (மிளகு ,சீரகம்,மல்லி(தனியா )  ,புளிக்கரைசல் , வெள்ளைப் பூண்டு , புதினா ,கொத்தமல்லித் தழை  )   முசுமுசுக்கையையும் சேர்த்து ,நுரை சேர்ந்த பின்   கொதிக்கும் முன் இறக்கி வைத்து உபயோகிக்கவும்.
பயன் :-
உடல் வலி, சளி , இருமல் , சலதோடம் , இளைப்பு  , ஈளை , காசம் , ஈசனோபிலியா, புகைச்சல் ஆகியவை தீரும் .


முசுமுசுக்கை
1)முசுமுசுக்கை (Mukai Scavrillia),
2)அருகம்புல்(Cynodon Dactylon Pers)
3)தூதுவளை (Solanum Trilobatum Linn)
4)கரிசலாங்கண்ணி(Eclipta Alba Hassk)
5)ஜீரகம் (Luminum Cyminum)

இவை ஐந்தும் சரி சமமாகக் கலந்து கேரளாவில் HIV,AIDS இரண்டு நிலைகளிலும் கொடுத்துக் குணப்படுத்திக் கொண்டுள்ளனர் .அவ்வளவு தூரம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குபவை இந்த மூலிகைகள். ஆதாரம் கீழ்க்கண்ட இணைப்பில் காணுங்கள்.
http://keralamedicine.blogspot.com/2008/04/siddha-medicine-and-aids.
http://www.lifepositive.com/body/body-holistic/aids/hiv-treatment.asp

இருமலுட ஈளை இரைப்புப் புகைச்சன்
மருவுகின்ற நீர்த்தூஷ மாருந் - திருவுடைய
மானே முசுமுக்கை மாமூலி  யவ்விலையை
த்தானே யருந்துபவர்க்கு.
             ( பதார்த்த குண விளக்கம் )

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

2 comments:

  1. சாமீ ஜி

    வேலை பளுவில் இருந்து மீண்டு(ம்)
    வந்துவிட்டீர்கள் மிக்க நன்றி

    ராணி இல் உங்கள் கட்டுரை வந்தது
    மிகுந்த சந்தோசத்தை தந்தது

    தொடர்ந்து பதிவிடுங்கள்
    (இது என் போன்ற வாசகர்களின் அன்பு கட்டளை)

    அன்புடன்
    ஷரீப்

    ReplyDelete
  2. அன்புமிக்க திரு பாவா ஷெரீஃப் அவர்களே,
    கருத்துரைக்கும் பாராட்டுக்கும் நன்றி.கட்டளைக்கு கீழ்ப்படிய நான் தயார்.கட்டளைக்கு கீழ்ப்படிய இறைவன் அனுக்கிரகிக்கட்டும்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்